Pages

Wednesday 16 May 2012

மொட்டை மாடியில் தினமும் வானம் பார்க்கிறேன்  பேர்வழி என்று உட்கார்ந்து

  கொள்வது எதற்காக? இருட்டில் நான் உட்கார்ந்திருப்பது  ஒரு பய

 பிள்ளைக்கும் தெரியாது. அவனவன்  என்னமா லைட்டை  போட்டுக்கிட்டு

  ரொமான்ஸ   பண்றாய்ங்க. பெண்கள் இப்படியா  ஜன்னலைத் திறந்து

போட்டுக்கொண்டு  உடை மாற்றுவார்கள்!  பாதகத்திகள் !  (ஆமா. ஆக்சுவலா

 பாதகத்தினா என்ன? தமிழ் கூறும் நல்லுலகமே !அர்த்தம் சொல்லுங்கப்பா.

சின்னப் பெண்கள் கண்ணாடி முன்னால் அப்படியும் இப்படியும் அழகு

பார்ப்பதும் ... அடாடா. அடாடா.  எத்தனை  கோடி இன்பம் வைத்தாய் இறைவா!  . 
டென்னிஸ் பேட் போன்ற  வடிவுள்ள  கொசு அடிக்கும் கருவியை எவன் கண்டு பிடித்தவன்? சாயந்திர  வேளைகளில், இரவுகளில் அகால  2 மணிக்கு கூட  எதிர் வீட்டு அம்மா அதை வைத்து கொசுவை சுட்டுத்  தள்ளும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. பட்பட் சட்சட்.  இது என்ன  விதமான உணர்வு? தன்  குழந்தையைக் கடிக்கும் கொசுவை சாகடிக்கும் ஒரு குரூரமான  திருப்தியும்  ஏகாந்தமும் அந்தம்மாவின்  முகத்தில். சில  சமயங்களில்  பயமாக  இருக்கிறது.   
மத்திய மாநில  அரசு மற்றும்  தனியார் துறைகள் எல்லாவற்றிலும் பெண்கள் சுடிதார் அணியும் வழக்கம் வந்து விட்டது. ஐ  டி  துறைகளில் மட்டுமல்ல,பேங்க். போஸ்ட் ஆபீஸ், கவர்மன்ட் ஆபீஸ்களிலும் பெண்கள் சுடிதார்  அணிந்து வருகிறார்கள். ஓடிப்போய் பேருந்தை பிடிக்க வசதியாகவும் உடல் முழுதும் மறைக்கக்கூடிய,   எளிய,   கண்ணியமான,   தன்னம்பிக்கை  அளிக்ககூடிய உடை சுடிதார். 

   எங்களை போன்ற  அரசுப் பள்ளிகளில் மட்டும் இன்னமும் சேலை கட்டும் சம்பிரதாயம் ஏன்? இந்த  ராமநாதபுர மாவட்டத்தில்  வெக்கை கொப்பளிக்கும் கிராமங்களில் எவ்வித வசதியும் இன்றி  அல்லல்படும் எங்களைப்போன்ற ஆசிரியர்களை  கருத்தில் கொண்டு பெண்ணினத்தின் கஷ்டங்களை புரிந்துகொள்ளும் அன்னை முதலமைச்சர் ஜெயலலிதா ஆசிரியர்களும் சுடிதார் அணிய  அனுமதி   வழங்கக் கூடாதா? பெண்ணினமே உங்களை வாழ்த்தி வணங்கும்.  
பின்னிரவில் செகண்ட் ஷோ சினிமா பார்த்து விட்டு வெறும் லுங்கியோடு

 விசிலடித்துக்கொண்டு வர முடிகிறது. ரோட்டோர வளைவுகளில் குட்டி

சுவர்களில்  வரிசையாக உட்கார்ந்து கொண்டு சத்தமாக பேசி சிரிக்க முடிகிறது.

(என்னதான் அப்படி விடிய விடிய பேசுவாங்களோ?) இரவில் இரண்டு மணிக்கு

படுக்கவும் காலை 11 மணிக்கு எழவும் முடிகிறது, நண்பர்களின் திருமணம்

என்று  வெளியூர்களுக்கு செல்லவும் சில  நாட்கள் அங்கேயே தங்கவும் மறு

பேச்சின்றி அனுமதி கிடைக்கிறது. உணவுகளில் பிடிக்கும் பிடிக்காது என்று

தெளிவான   முடிவுகளை தக்க வைத்துக்கொள்ள  முடிகிறது. ம்ம்ம். ஆண்கள். 
  யார் இந்த  ராஜு  முருகன்? ஆனந்த விகடனில்  வட்டியும்  முதலும் எழுதுபவன் 
யார்? (அவன் இவன் என்ற  ஏக வசனம் வேண்டாமோ?) எப்படி நம் மனதில் புகுந்து கொண்டு நாம் நினைப்பதை எல்லாம் இந்த ஆள் எழுதுகிறான். என்ன  கொடும   சார் இது? நேத்து அண்ணன் கிட்ட போன்ல  பேசும்போது யார்ல இவன்? என்றேன். தெரியல  மக்கா. நம்ம  பேசுதது எல்லாம்  இவனுக்கு எப்பிடில  தெரியுது என்றான், கிரேட் பீப்பிள்  திங்க் அலைக்  என்றேன். மக்கா நம்மல்லாம் கிரேட் பீப்பிலா என்றான்.இல்லையா பின்னே?   

Saturday 7 April 2012

நாடித்துடிப்பு 

என் அன்பு அப்பா,

உன் சுண்டுவிரலைப்
 பிடித்துக்கொண்டு
தெருவின் மீதேறி நடைபழக 
இன்னுமேன் ஆசை எனக்கு?

உன் பக்கத்தில் படுத்து 
உன் வாசம் நுகர்ந்து 
தம்பிக்கு நீ சொல்லும் கதை கேட்க 
மறுபடி வாய்க்குமா?

எல்லாப் பெண்குழந்தைகள் போல 
எனக்கும் நீதானே 
முதற்காதலன்.
பார்க்கும் ஆண்களிளெல்லாம் 
உனைத்தானே தேடுகிறேன்.

அச்சடித்த கையெழுத்து 
நேர்மையான நோக்கு 
சிரிக்கும்போது
 சேர்ந்தே சிரிக்கும் கண்கள்,
தீரா இலக்கிய தாகம்,
காலை மாலை 
இருவேளைக் குளியல்
உடல் சுத்தம்,
உள்ள   சுத்தம்,
காரிய நேர்த்தி, கடமையுணர்வு, 
தீராத அன்பு,
தெவிட்டாத  குரல்,

அப்பா,
நீ ஆண்மகன், 
நீதான் ஆண்மகன்.

உனைபோலோருவன் 
உலகில் உளனா?
உளன் எனில் 
உயிர் விடுமுன் 
காணக் கிடைப்பேனா?

உணவும் நீரும் உண்டா
நான் உயிர் வாழ்கிறேன்?
அப்பா, 
உன் முகமும்,முறுவலும் உண்டுதானே 
உயிர் துடிக்குதென் நாடி..

அப்பா,
அடிவயிற்றிலிருந்து நீ 
என் பெயர் உச்சரிக்கையில் 
என் உயிரிலும் கூடப் 
பூப்பூக்கிறது.
முரணாக என் 
வயிற்றுத்தணல்கள்
விசிறப்படுகின்றன.

இப்போதெல்லாம் 
உன் பிறந்த நாட்கள் 
எனக்குப் பிடிப்பதில்லை அப்பா.
காலத்தைக் கட்டிப் போட
நினைக்கிறேன்,
என் கைக்குள் அடங்கவில்லை.
கடவுளையும் காணவில்லை.



Sunday 1 April 2012

சுவர்க்கம் 

வாரத்தின் ஏழு நாளும் 
வாழ வேண்டுமா? 

அன்பு செய்.

மனைவியின் கால்நகம் 
கடித்துத் துப்பு,

குழந்தையைக் குளிப்பாட்டு,
செடியிடம் பேசு, 

அம்மாவின் முந்தானை நுகர்ந்து 
பால் வாசம் இன்றுணர்,

தோழியிடம் தோற்றுப் போ
,
கண்களால் பேசு

புன்னகையால் பார்

மனம் திறந்து வை,

சத்தமாகச் சிரி
,
கண்ணீர் வழிய இசை கேள்,

அணைத்துக்கொள்

அணைக்கவிடு,

சுவர்க்கம் வானில் இல்லை,

இன்னுமா புரியவில்லை?
  

Saturday 31 March 2012

வேம்பாகிய  நான் 
ஜென்மங்கள் உண்மையா?
ஆமெனில் ஓராசை. 
அடுத்த ஜென்மமொன்றிருந்தால் 
மரமாவேன்.
நான் வேம்பாவேன். 

தகிக்கும் வெயில்,
வேர் நனைக்கும் மழை,
அடிக்கும் புயல்,
கொட்டும் பனி,
எனைக் கட்டி அணைக்கும் காலங்கள்.
கண்கள் மூடி 
வேர்கள் இறுக்கி
பேரின்பம் நான் காணுவேன். 

மழை வந்தால் சிலிர்ப்பேன். 
வெயிலானால் மவுனிப்பேன்.
பனியானால் இரவெலாம் 
வெடவெடத்து நடுங்குவேன். 

ஆணிஎடுத்துக் கீறிப்பார். 
பால் வழியும் என் மார்பு. 
கோடரி எடுத்து வெட்டிப் போ. 
உத்திரமாவேன், நிலையாவேன். 

பறவைகள் என்னில் கூடுகட்டும்.
எச்சமிடும், அலகால் கீறும். 
அதன் கால் விரல் நகங்கள் 
என் மரப்பட்டை கவ்வும். 
கூச்சத்தில் உடல் சிலிர்ப்பேன்.
கிளைகள் ஆட்டுவேன். 
பூக்களாய் பூமியில் உதிர்ப்பேன். 

ஆயிரம் கரங்கள் நீட்டி
எட்டுத்திசையிலும் 
கிளைகள் பரப்புவேன்.
அத்தனை கரங்களாலும் 
பூமி அணைப்பேன்,
அள்ளித் தருவேன்.  
வாழ்க்கை

வாழ்வு துறந்து 
மரணம் விழைய
மனம் துடிக்கும் கணங்களில் 
கட்டாயமாய் வாழச் சொல்லும் 
பூத்து குலுங்கும் ரோஜாக்கள்.

புறப்படுகையில் டாடா சொல்லும் 
எதிர் வீட்டுக் குழந்தை. 

எண்பது வயதில் கூவி விற்கும் 
கீரைக்கார பாட்டி

ஏகாந்தமாய் படுத்துக்கொண்டு 
பால் கொடுக்கும் தாய்ப்பன்றி. 

வண்டியில் லைட் எரிவதாய்
சைகை செய்யும் பாதசாரி. 

ரயில் பயணங்களில் 
கையசைக்கும் ரோட்டோரச் சிறுவர்கள். 

மழைக்காலத்தில் தார் ரோட்டில்
பூத்திருக்கும் பெட்ரோல் கோலம். 

தொலைபேசியைக் காதில் வைத்துப் 
பேசாமலேயே இருக்கும் காதலர்கள்.

வாழ்க்கைதான் எத்தனை அழகானது. 



என் மரணத்திற்குப் பின்பு 

வீட்டிலும் முற்றத்திலும் கூட்டம்.
கதவுகள் விரியத் திறந்திருக்கும்.
ஆண்களெல்லாம் வாசலில்,
பெண்கள் வீட்டினுள்.

எளிதில் அடையாளம் காண 
வாசலில் பந்தல். 
பிளாஸ்டிக் சேர்கள்.
அவ்வப்போது விட்டு விட்டு 
எழும் ஒப்பாரி. 

தெருமுனைவரை 
வெற்றிலை எச்சில் தெறிக்க 
கதைத்துக்கொண்டு வரும் கூட்டம்.
வாசல் வந்ததும் கதறி உள்வரும். 
பின் காபி அருந்தும். 

எப்படிப் போனதென்று கேட்பவர்களிடம் 
என் சாவு நேர்ந்த விதம் பற்றி 
மெல்லிய குரலில் சொல்வான் தம்பி. 
எனக்குப் பிரியமான 
 சிகப்பு ரோஜாக்களை 
உடலெங்கும் நிறைத்து வைப்பான். 
என்னிரு பாதங்களையும் 
பற்றிக் கதறுவாள் என் மகள். 
என் பிணத்தின் முலைகளிலும் 
பால் சுரக்கும். 

உறவினர்களுக்கும்
 நண்பர்களுக்கும் 
ஒரு எளிய விண்ணப்பம். 
தயவுசெய்து யாரும் 
ஊதுபத்தி ஏற்ற வேண்டாம். 
குளிப்பாட்டியபின் 
முகம் நிறைய 
மஞ்சள் அப்பாதீர்கள். 
தோடுகளையும் 
மோதிரங்களையும் 
மெல்லக் கழற்றுங்கள். 
கால் விரல் கட்ட.
மெல்லிய துணி உபயோகியுங்கள். 

தினமும் என்னுடன் உறங்கும் 
ஜன்னல் நிலாவுக்கு
 சேதி அனுப்புங்கள்
இனி வந்து எனை தேட வேண்டாமென. 

செம்பருத்திக்கு 
தினமும் 
நீரூற்ற மறக்காதீர்கள்.
என் மரணம் 
அவள் 
அறிய வேண்டாம். 



Tuesday 27 March 2012

காட்டு பூவாய்
அலட்சியமாகவும்,

மலையருவியாய்
ஆர்ப்பரித்தும்


கடல் மழையாய் 
திமிருடனும்,


 தீவு நிலவாய்
 சலனமில்லாமலும்,
சுற்றித் திரிந்தேன்.

உன் மயக்கும் விழிகளும்
மோகச் சிரிப்பும்
என் திமிரை அடக்கித்
தீக்கனலில் இட்டன.

காட்டுத் தீ.
எரியும் காடு பற்றி.

அமைதியாய் கிடந்த
கிணற்று நீரில்
கல்லெறிந்து விட்டாய்.
அதிர்வலைகள் இல்லாமல்
இருக்குமா?

என் கருப்பு வெள்ளை வாழ்க்கையில்
என்ன வர்ணம் தீட்ட வந்தாய்?

கண் தொடும்
உறவு சில.
இதழ் சிரிக்கும்
உறவு சில.
கை குலுக்கும் சில.
தோள் அணைக்கும் சில.
மனம் சேரும்
உடல் சேரும் உறவு சில.

நான் உன் உயிர் தீண்டுவேன்.
உன் ஆன்மாவின் உள் உறைவேன்.


என் உயிர்  இனிப்பை 
உனக்கு உணர்த்துவேன்.





என்னிடம் பல குறைகள்.
என்ன சொல்லி என்ன பயன்?
கண்ணாடி நான்.
உடைப்பதே அனைவர் விருப்பம்.
யார் அதை முத்தமிட்டு பாதுகாப்பார்? 

Monday 26 March 2012

உனக்கு தெரியுமா?
இதழ்களில் தொடங்கி
கன்னகதுப்புகளில் பயணித்து
கண்களில் படர்ந்து 
காதில் முடியும்
உன் சிரிப்பினில் தானே
நான் சிதறிப்போனேன் ...
partiality னா  என்ன?( r  silent ஆம். சாவடிகிறானுக )பத்து குழந்தைகள் இருக்கிற இடத்தில ஒரு குழந்தை மேல கொஞ்சம் அதிகபடியான பிரியம் இருக்கத்தான் இருக்கு. தப்பா? இந்த sixth std  கரண் அவன் மாட்டு முழியும் எண்ணெய் காணாத செம்பட்டை தலையும் பசிச்ச முகமும் என்னமோ நானே பெத்த மாதிரி இல்ல தோணுது.அதை தப்புன்னா என்ன செய்றது? இந்த லட்சணத்துல அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ... my foot ..