நாடித்துடிப்பு
என் அன்பு அப்பா,
உன் சுண்டுவிரலைப்
பிடித்துக்கொண்டு
தெருவின் மீதேறி நடைபழக
இன்னுமேன் ஆசை எனக்கு?
உன் பக்கத்தில் படுத்து
உன் வாசம் நுகர்ந்து
தம்பிக்கு நீ சொல்லும் கதை கேட்க
மறுபடி வாய்க்குமா?
எல்லாப் பெண்குழந்தைகள் போல
எனக்கும் நீதானே
முதற்காதலன்.
பார்க்கும் ஆண்களிளெல்லாம்
உனைத்தானே தேடுகிறேன்.
அச்சடித்த கையெழுத்து
நேர்மையான நோக்கு
சிரிக்கும்போது
சேர்ந்தே சிரிக்கும் கண்கள்,
தீரா இலக்கிய தாகம்,
காலை மாலை
இருவேளைக் குளியல்
உடல் சுத்தம்,
உள்ள சுத்தம்,
காரிய நேர்த்தி, கடமையுணர்வு,
தீராத அன்பு,
தெவிட்டாத குரல்,
அப்பா,
நீ ஆண்மகன்,
நீதான் ஆண்மகன்.
உனைபோலோருவன்
உலகில் உளனா?
உளன் எனில்
உயிர் விடுமுன்
காணக் கிடைப்பேனா?
உணவும் நீரும் உண்டா
நான் உயிர் வாழ்கிறேன்?
அப்பா,
உன் முகமும்,முறுவலும் உண்டுதானே
உயிர் துடிக்குதென் நாடி..
அப்பா,
அடிவயிற்றிலிருந்து நீ
என் பெயர் உச்சரிக்கையில்
என் உயிரிலும் கூடப்
பூப்பூக்கிறது.
முரணாக என்
வயிற்றுத்தணல்கள்
விசிறப்படுகின்றன.
இப்போதெல்லாம்
உன் பிறந்த நாட்கள்
எனக்குப் பிடிப்பதில்லை அப்பா.
காலத்தைக் கட்டிப் போட
நினைக்கிறேன்,
என் கைக்குள் அடங்கவில்லை.
கடவுளையும் காணவில்லை.