Pages

Saturday, 31 March 2012

என் மரணத்திற்குப் பின்பு 

வீட்டிலும் முற்றத்திலும் கூட்டம்.
கதவுகள் விரியத் திறந்திருக்கும்.
ஆண்களெல்லாம் வாசலில்,
பெண்கள் வீட்டினுள்.

எளிதில் அடையாளம் காண 
வாசலில் பந்தல். 
பிளாஸ்டிக் சேர்கள்.
அவ்வப்போது விட்டு விட்டு 
எழும் ஒப்பாரி. 

தெருமுனைவரை 
வெற்றிலை எச்சில் தெறிக்க 
கதைத்துக்கொண்டு வரும் கூட்டம்.
வாசல் வந்ததும் கதறி உள்வரும். 
பின் காபி அருந்தும். 

எப்படிப் போனதென்று கேட்பவர்களிடம் 
என் சாவு நேர்ந்த விதம் பற்றி 
மெல்லிய குரலில் சொல்வான் தம்பி. 
எனக்குப் பிரியமான 
 சிகப்பு ரோஜாக்களை 
உடலெங்கும் நிறைத்து வைப்பான். 
என்னிரு பாதங்களையும் 
பற்றிக் கதறுவாள் என் மகள். 
என் பிணத்தின் முலைகளிலும் 
பால் சுரக்கும். 

உறவினர்களுக்கும்
 நண்பர்களுக்கும் 
ஒரு எளிய விண்ணப்பம். 
தயவுசெய்து யாரும் 
ஊதுபத்தி ஏற்ற வேண்டாம். 
குளிப்பாட்டியபின் 
முகம் நிறைய 
மஞ்சள் அப்பாதீர்கள். 
தோடுகளையும் 
மோதிரங்களையும் 
மெல்லக் கழற்றுங்கள். 
கால் விரல் கட்ட.
மெல்லிய துணி உபயோகியுங்கள். 

தினமும் என்னுடன் உறங்கும் 
ஜன்னல் நிலாவுக்கு
 சேதி அனுப்புங்கள்
இனி வந்து எனை தேட வேண்டாமென. 

செம்பருத்திக்கு 
தினமும் 
நீரூற்ற மறக்காதீர்கள்.
என் மரணம் 
அவள் 
அறிய வேண்டாம். 



1 comment:

  1. Feels Emily Dickinson once again after so many years.
    Thenmozhi... u r the same..... no change

    ReplyDelete