வாழ்க்கை
வாழ்வு துறந்து
மரணம் விழைய
மனம் துடிக்கும் கணங்களில்
கட்டாயமாய் வாழச் சொல்லும்
பூத்து குலுங்கும் ரோஜாக்கள்.
புறப்படுகையில் டாடா சொல்லும்
எதிர் வீட்டுக் குழந்தை.
எண்பது வயதில் கூவி விற்கும்
கீரைக்கார பாட்டி
ஏகாந்தமாய் படுத்துக்கொண்டு
பால் கொடுக்கும் தாய்ப்பன்றி.
வண்டியில் லைட் எரிவதாய்
சைகை செய்யும் பாதசாரி.
ரயில் பயணங்களில்
கையசைக்கும் ரோட்டோரச் சிறுவர்கள்.
மழைக்காலத்தில் தார் ரோட்டில்
பூத்திருக்கும் பெட்ரோல் கோலம்.
தொலைபேசியைக் காதில் வைத்துப்
பேசாமலேயே இருக்கும் காதலர்கள்.
வாழ்க்கைதான் எத்தனை அழகானது.
No comments:
Post a Comment